காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்
தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் கிராமத்தை சேர்ந்த ரவிகுமார் என்பவரது மனைவி மணிமேகலை (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டிற்கு அருகே தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து விட்டு, இலை மூட்டையை சுமந்து சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றி திடீரென மணிமேகலையை கடித்து தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். உடனே சத்தம் கேட்டு அங்கிருந்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து காட்டுப்பன்றியை விரட்டினர்.
பின்னர் படுகாயம் அடைந்த மணிமேகலையை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு காலில் தையல்கள் போடப்பட்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த மணிமேகலைக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.