பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?


பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?
x

பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதாதது ஏன்? என்பது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை

'ஆப்சென்ட்' விவகாரம்

கல்வி ஒன்றே மனிதனின் சொத்து, கல்வி என்பது ஒரு ஆயுதம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் கல்வி விஷயத்தில் தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் நடந்த தமிழ் தாள் தேர்வில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் 'ஆப்சென்ட்' ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் மொழித்தாள் தேர்வை பள்ளி மாணவர்களாக 49 ஆயிரத்து 559 பேரும், தனித் தேர்வர்களாக 1,115 பேரும் என மொத்தம் 50 ஆயிரத்து 674 பேர் எழுதாமல் இருந்தது, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் அம்பலம் ஆகியது. இதில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் தேர்வை 1,348 பேரும், 15-ந் தேதி நடந்த ஆங்கிலப்பாடத்தேர்வை 1,325 பேரும் எழுதவில்லை.

உடனடி ஆலோசனை

வழக்கமாக 2 சதவீதம் 3 சதவீதம் வரையில் தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆவார்கள். ஆனால் இந்த முறை வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக, அதாவது, இதுவரை இல்லாத வகையில் அதிகமான மாணவ-மாணவிகள் இந்த ஆண்டில் தேர்வை எழுதாமல் இருந்திருக்கின்றனர். இது கல்வித்துறையை மட்டுமல்லாது, கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் உள்பட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

இந்த விஷயத்தை உடனடியாக கையில் எடுத்த பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியது. இதில் மாணவ-மாணவிகள் தேர்வை எழுத வராததற்கான காரணங்கள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் கேட்டனர்.

காரணம் என்ன?

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, இனி வர இருக்கக்கூடிய தேர்வுகளிலாவது பெரிய அளவில் 'ஆப்சென்ட்' இல்லாமல் மாணவ-மாணவிகளை தேர்வு எழுத வைப்பது, தேர்வு எழுதாமல் போனவர்களை ஜூன் மாதத்தில் நடைபெறும் துணைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு வகுப்புகள் நடத்தி எழுத வைப்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றனர்.

இப்படியிருக்கும் நிலையில், தேர்வை எழுதாத மாணவ-மாணவிகள் என்ன காரணத்துக்காக அவர்கள் வராமல் இருந்தார்கள்? என்பது பற்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் விவரங்களை பெற்று விசாரித்த போது, அதில் பெரும்பாலானோர் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியை சந்தித்து, 12-ம் வகுப்பை தொடராதவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும், படிப்பில் ஆர்வம் இல்லாதது, தேர்வு பயம், குடும்ப சூழலால் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை, காதல் திருமணம், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிக்க விரும்பியது ஆகியவற்றாலும் தேர்வை எழுதாத நிலையில் உள்ளனர். மொத்தத்தில் கொரோனா பலருடைய இயல்பு வாழ்க்கையை மாற்றியது போல, மாணவ-மாணவிகளின் வாழ்க்கையும் சற்று சீண்டி பார்த்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. இதுபற்றி புதுக்கோட்டையில் தேர்வை எழுதாத மாணவ-மாணவிகள் சிலரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

தேர்வு எழுத அச்சம்

புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்த மாணவர்:- நான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளார். எனது தாய் கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து படிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டபோது, நானும் வேலைக்கு சென்று வந்தேன். பின்னா் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டபோது நான் பள்ளிக்கு சரியாக செல்லவில்லை. இந்தநிலையில் பிளஸ்-2 தேர்வு எழுதுவதில் ஏற்பட்ட அச்சம் மற்றும் பதற்றத்தின் காரணமாக தேர்வு எழுதவில்லை. மேலும் எனது பள்ளி ஆசிரியர்கள், என்னை தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தனர். தேர்வு எழுதாத பாடத்தை மீண்டும் எழுத வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளேன்.

அனைத்து பாடங்களிலும் தோல்வி

நார்த்தாமலையை சேர்ந்த மாணவி:- நான் பிளஸ்-1 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தேன். பிளஸ்-1 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தோல்வி அடைந்தேன். அதன்பின் பிளஸ்-2 வகுப்பு வந்த பின் பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் தான் இருந்து வருகிறேன். தொடர்ந்து பள்ளிக்கு செல்லாததால் நான் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதவில்லை. நான் அடுத்து ஐ.டி.ஐ. படிக்கலாமா? என யோசித்து வருகிறேன்.

படிப்பில் நாட்டம் இல்லை

ரெகுநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணவர்:- 10-ம் வகுப்பு தேர்வில் 2 முறை தோல்வி அடைந்தேன். பின்னர் தேர்ச்சி பெற்றபோதும், சரக்கு ஆட்டோவில் கிளீனராக வேலை பார்த்த என்னை பெற்றோர் கட்டாயப்படுத்தி பிளஸ்-1 வகுப்பில் சேர்த்து விட்டனர். படிப்பில் நாட்டம் இல்லாததால் சரிவர பள்ளிக்கு செல்லவில்லை. என்னுடன் படித்த நண்பர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனால் எனக்கு பள்ளிக்கு செல்ல தயக்கமாக இருந்தது. இருப்பினும் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் சரியாக படிக்காமல் தேர்வு எழுதினால் தோல்வி அடைந்து விடுவேன் என்பதால் தேர்வுக்கு செல்வதாக வீட்டில் கூறியபோதும், தேர்வு எழுத செல்லவில்லை. பின்னர் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்து விட்டேன்.

தேர்வு எழுத செல்லவில்லை

அறந்தாங்கியை சேர்ந்த மாணவி:- தற்போது பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் பிளஸ்-2 வகுப்பை தொடர விரும்புவதில்லை. பாடச்சுமை காரணமாக எனக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. பள்ளிக்கு சென்றும் ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் பாடங்கள் மனதில் பயவில்லை. எப்படியும் தேர்வில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துவிட்டது. அதன் பின்னர் ஏன் தேர்வு எழுதவேண்டும் என்று நினைத்து தேர்வு எழுத செல்லவில்லை.

பள்ளி செல்ல பிடிக்கவில்லை

மணமேல்குடியை சேர்ந்த மாணவர்:- எனது தாய்-தந்தை கூலி வேலைக்கு செல்கின்றனர். கொரோனா காலத்தில், குடும்ப செலவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அப்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், எனது தந்தையுடன் நானும் கூலி வேலைக்கு சென்றேன். அந்த வருமானத்தை வைத்து குடும்ப செலவுகளை பார்த்து கொண்டோம். பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, எனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை. 'ஆல் பாஸ்' போட்டதால் அடுத்த வகுப்புக்கு சென்றேன். ஆனால் 2 ஆண்டாக படிப்பு பற்றியே மறந்துவிட்டது. பிளஸ்-1 வகுப்பில் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தாலும் தேர்ச்சி பெற்றிருக்கமாட்டேன். அதனால் தேர்வுக்கு செல்லவில்லை.

வேலைக்கு சென்றுவிட்டனர்

அரிமளத்தை சேர்ந்த மாணவி:- நாங்கள் எல்லாம் கொரோனா காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதாமல் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்தோம். இந்தநிலையில் பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்றதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். காரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் எல்லாம் பிளஸ்-1 வகுப்பில் ஆல் பாஸ் போட்டு விடுவார்கள். ஆனால் எங்களுக்கு மட்டும் பொது தேர்வு வைக்கின்றனர். இந்த தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையெனில் எங்களை பிளஸ்-2 வகுப்புக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால் பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடத்தை நாங்கள் பிளஸ்-2 பொது தேர்வு நடைபெறும் நாளுக்கு முதல் நாள் இந்த தேர்வை எழுத வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் பிளஸ்-1 வகுப்பு தேர்வுக்கு படிப்பதா? அல்லது பிளஸ்-2 வகுப்பு தேர்வுக்கு படிப்பதா? என குழப்பம் அடைகிறோம். மேலும் எனது நண்பர்கள் எல்லாம் இது போன்று தேர்வு எழுத வேண்டும் என பயந்து பிளஸ்-2 வகுப்பு வந்தவுடன் ஒரு சிலர் பள்ளியை விட்டு சென்று விட்டனர். அவர்கள் திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்கு சென்று விட்டனர். ஆனால் அவர்களுடைய பெயர் தற்பொழுதும் பள்ளி வருகை பதிவேட்டில் உள்ளது. அவர்களுக்கும் ஹால் டிக்கெட் வந்துள்ளது. நீண்ட காலம் பள்ளிக்கு வராத மாணவ- மாணவிகளுக்கும் அரசு பொது தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story