புதுக்குளம் பூங்கா மேம்படுத்தப்படுவது எப்போது?


புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது, இருக்கைகள், மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. பூங்கா மேம்படுத்தப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் படகு சவாரி மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

புதுக்கோட்டை

புதுக்குளம்

புதுக்கோட்டை நகரில் பெரிய குளமாக புதுக்குளம் அமைந்துள்ளது. இதன் கரைப்பகுதி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவு கொண்டதாகும். இந்த குளத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த போது மன்னர்கள் காலத்தில் இக்குளம் தோண்டப்பட்டது. இதில் தோண்டப்பட்ட மண்கள் மூலம் புதுக்கோட்டையில் கோர்ட்டு, அரண்மனை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. மேலும் இந்த குளம் ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் குடிநீர் வசதி உருவான பின் இக்குளம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

இந்த குளத்தின் அருகே பூங்கா உருவாக்கி அதற்கு சின்னப்பா பூங்கா என பெயரிடப்பட்டது. புதுக்குளம் பூங்கா என்றாலே அனைவரும் அறியும் வகையில் புதுக்கோட்டையின் ஒரு அடையாளமாக காணப்படுகிறது.

ரூ.5 கோடி அறிவிப்பு

இந்த குளத்தை சுற்றி நடைபாதைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. இந்த குளத்தின் கரையில் நடைபாதையில் பொதுமக்கள் அமருவதற்கு சிமெண்டுகளால் ஆன இருக்கைகள், மேற்கூரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. மேலும் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்களும், ராட்டினங்களும் வைத்து பொழுது போக்கு அம்சமாக உருவாக்கப்பட்டது. இந்த பூங்கா மேலும் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

ரூ.5 கோடியில் பூங்கா மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்குளம் பூங்காவை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

படகு சவாரி

சவரிமுத்து:- புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 500-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த குளத்தின் கரைப்பகுதியில் பொதுமக்கள் நடைபாதை செல்லும் இடத்தின் அருகே கருவேலமரங்கள், முட்செடிகள் முளைத்து காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும். கரையை சுற்றியுள்ள பெரிய மரங்கள் அப்படியே இருக்க வேண்டும். புதர்போல் காணப்படுகிற இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதில் பாம்புகள் உள்பட பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் குளத்தின் அழகை பார்த்தப்படி நடந்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்பு இந்த குளத்தில் படகு சவாரி இருந்தது. அதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டனர். படகு சவாரியை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் சுற்றுலா தலமாக இந்த புதுக்குளம் மாறும். இந்த குளம் மேம்படுத்தப்படும் என அறிவித்ததோடு சரி.எனவே அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

மதுப்பிரியர்கள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஜெயராஜ்:- இந்த குளக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. இதனை முறையாக பராமரிக்க வேண்டும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதில் அமைக்கப்பட்ட இருக்கைகள் பெயர்ந்து காணப்படுகிறது. டைல்ஸ் போன்ற கற்களில் அமைக்கப்பட்ட இருக்கைகளை கழற்றி எடுத்து சென்று விடுகின்றனர். இதனை சரி செய்து சேதமடையாத வகையிலும், கழற்றி எடுத்து செல்ல முடியாத வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும். சேதமடைந்த மேற்கூரைகளை மாற்ற வேண்டும். சில நேரங்களில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த குளக்கரை மாறிவிடுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளையாட்டு உபகரணங்கள் சேதம்

சண்முகம்:- பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களில் சேதமடைந்திருப்பதை சரி செய்ய வேண்டும். நடைபயிற்சி செல்லும் இடத்தின் அருகே காணப்படும் புதர்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். நாய்கள் தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். இயற்கை சூழல் நிறைந்த செடிகளை நட்டு அழகுபடுத்தலாம்.

குடும்பத்தோடு வருகை

தட்சிணாமூர்த்தி:- புதுக்கோட்டை நகரப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி மேற்கொள்ள வரக்கூடிய ஒரே பூங்கா இது மட்டும் தான். மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளக்கூடிய வசதி இருந்தாலும் அங்கு குறிப்பிட்ட நபர்கள் தான் செல்வார்கள். ஆனால் இங்கு அனைத்து தரப்பினரும் ஆண்களும், பெண்களும், குடும்பத்தோடும் வருவார்கள். ஒரு பொழுதுபோக்கு தலமாக இது காணப்படுகிறது. இதில் புதர்கள் நிறைந்து காணப்படுவதை அகற்ற வேண்டும். அரசு உயர் அதிகாரிகள் இங்கு நடைபயிற்சி வந்த போது ஓரளவு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. போலீசாரும் ரோந்து வந்து சென்றால் இதில் சில சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story