'கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?' - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "கல்வராயன் மலைப்பகுதி 1976-ல் தான் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. 1996-ல் தான் அந்த பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்கிறது.

அங்கு சுமார் 95 சதவிகித மக்கள் பழங்குடியின மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். மக்களின் வாக்குகளைப் பெற்ற பின் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? இல்லையா? என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசியலமைப்பு கடமை என்ன? என்ற கேள்வி எழுகிறது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் தமிழ்மணி, எவரேனும் அங்கு நேரில் சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைகிறதா? என்பது குறித்து ஆராய்ந்து, வரும் 24-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story