கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: நல்லசாமி பேட்டி


கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: நல்லசாமி பேட்டி
x

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

கரூர்

பேட்டி

கரூரில் நேற்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

28 ஆண்டு கால சட்ட போராட்டத்தில், காவிரியில் தினமும் நீர்பங்கீடு என்ற இலக்கை முன்நிறுத்தி தமிழ்நாடு அரசு வாதிட்டு தீர்ப்பை பெற்றிருந்தால் நீர்பங்கீடு எளிதாக இருந்திருக்கும்.

மேகதாதுவில் அணைக்கட்டும் எண்ணமும் கர்நாடகாவிற்கு வந்திருக்காது. மாநில உறவுகள் மேம்பட்டிருக்கும். பருவமழை குறையும் ஆண்டுகளில் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் கர்நாடகம் பாதிப்பிற்கு ஆளாகும். தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் போனால் தமிழ்நாடு பாலைவனமாகும். இதற்கு ஒரே தீர்வு தினமும் நீர்பங்கீடு மட்டுமே.

தண்ணீர் திறக்கப்படும்

வழக்கம்போல் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாசனப்பயனாளிகள் மஞ்சள், கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அட்டவணைப்படி வரும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டு இருக்கின்றார்.

இதை கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம் வரவேற்கின்றது. நெடுஞ்சாலைத்துறையானது போக்குவரத்து பாலங்கள் கட்டி வருவதை காரணம் காட்டியும், கால்வாய் மராமத்துப்பணிகள் முற்றுபெறாமல் இருப்பதை நீர்வளத்துறை எடுத்து சொல்லியும் நீர்விடும் தேதி தள்ளிப்போய் விடக்கூடாது.

தோற்கடிப்பார்கள்

கீழ்பவானி பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றினாலும், மண்கால்வாயாக இருந்தாலும் ஒரே அளவு நீரை தான் கொண்டு செல்ல முடியும். கான்கிரீட் போட்டால் கடை கோடிகளுக்கு உரிய நீரை உரிய காலத்தில் கொண்டு செல்ல முடியும் என கூறுவது தவறானது.

பி.ஏ.பி. பாசனத்தில் தோல்வி கண்டிருக்கும் கான்கிரீட் திட்டத்தை மக்களின் எதிர்ப்புக்களுக்கிடையே அரசு கீழ்பவானி திட்டத்தில் செயல்படுத்தினால் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதி பாசன பயனாளிகள் தி.மு.க. அணி வேட்பாளர்களை தோற்கடிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story