மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்


மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 12 Jun 2023 6:46 PM GMT)

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகங்கை

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்ற பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு நேற்று முதல் திறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக புத்தக பையுடன் வந்தனர்.

முன்னதாக அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், சக ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

சிகப்பு கம்பளம்

காரைக்குடி ராமநாதன்செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை அங்கையற்கன்னி தலைமையில் உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், ஆசிரியைகள் விஜய்காந்தி, விஜயலெட்சுமி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

சிங்கம்புணரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக சிகப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவுவாயிலில் தொடங்கி பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகம் வரை சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து அவர்கள் மீது மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story