வருமான வரித்துறையினரின் சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம்: அமைச்சர் பேட்டி


வருமான வரித்துறையினரின் சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம்:  அமைச்சர் பேட்டி
x

வருமான வரித்துறையினரின் சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

வருமான வரித்துறை சோதனை

கரூரில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது இல்லம் தவிர சகோதரர், நண்பர்கள், உறவினர்கள், அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நான் பள்ளிகூடம் முடிப்பதற்கு முன்பு தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், அந்த தொழில் நிறுவனங்களில் அனைவரும் முழுவதுமாக வருமான வரி செலுத்தக்கூடியவர்கள். தொடர்ந்து செலுத்தி கொண்டு இருப்பவர்கள். அப்படிப்பட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இருந்தாலும் கூட ஏதேனும் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயமாக அவர்கள் அதற்கு மேல் நடவடிக்கையாக அந்த வரியை செலுத்த தயாராகதான் இருப்பார்கள். ஆடிட்டர் கொடுத்த வரியை அவர்கள் செலுத்தி இருப்பார்கள். கூடுதலாக செலுத்த வேண்டியது எதும் கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டால் அதை அவர்கள் செலுத்த தயாராகத்தான் இருப்பார்கள்.

போலீசார் யாரும் இல்லை

கடைகள், வீடுகளில் சோதனை செய்யும் போது இரவில் முடிக்கிறார்கள். மீதி இருப்பதை பார்க்க வேண்டி இருப்பதால் இரவில் சீல் வைத்து மீண்டும் காலையில் அதனை நீக்கி திரும்பவும் சோதனை செய்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரை பொறுத்தவரை அவர் எதிர்க்கட்சி தலைவர் என்று சொல்லுவதற்கே தகுதி இல்லாதவர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோதனை என்பது எங்களுக்கு தகவல் இல்லை என்று கூறுகிறார். வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆர்.சி.பி.எப். அதிகாரிகள், போலீசார் யாரும் இல்லை. இதனால் நிர்வாகிகள் கேள்வி கேட்கும் போது முறையான பதிலை சொல்லி இருக்க வேண்டும். இதனால் அப்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து விட்டது.அப்போது நான் எந்தவிதமான அசம்பாவிதம் இல்லாமல், வருமான வரித்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கூறினேன். அவர்களும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கிறார்கள். முழு ஒத்துழைப்புடன் சோதனை நிறைவு பெறும். நிர்வாகிகள் யாரும் பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை. வந்தவர்கள் உண்மையான வருமான வரித்துறை அதிகாரிகளா என ஆய்வு செய்வது ஒவ்வொருவரின் கடமை.

சட்டப்படி எதிர்கொள்ள தயார்

வருமான வரித்துறை சோதனை நான் புதிதாக பார்க்கவில்லை. இதுபோன்று இன்னும் பல சோதனைகள் வந்தாலும் கூட அதனை எதிர்கொள்வேன். கரூர் மாவட்டத்தின் செயலாளராகவும், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும், 2 துறைகளை வழிநடத்த கூடிய, திட்டங்களை செயல்படுத்தக்கூடிய ஒரு பொறுப்பை முதல்-அமைச்சர் என்மீது நம்பிக்கை வைத்து வழங்கி இருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவது எனது கடமை. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இந்த சோதனை மட்டுமல்ல, இன்னும் ஆயிரம் சோதனைகள் நடத்தினாலும் தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் வெல்லக்கூடியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை சொத்துகளை முடக்கியது குறித்து கேட்டபோது, நானாக இருந்தாலும் சரி, எங்களுடைய விளையாட்டு துறை அமைச்சராக இருந்தாலும், யார் மீது இதுபோன்ற தாக்குதலை முன்னெடுத்தாலும் சட்டப்படி எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு அவா் கூறினார்.


Next Story