மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தளராமல் உழைக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை


மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தளராமல் உழைக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
x

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தளராமல் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

5 நாட்களில் 16 மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தலாம் என திட்டமிட்டோம்.

முதல் கூட்டத்தை கடந்த 19-ந்தேதி காஞ்சீபுரத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சிதான் அனைத்து மாவட்டங்களிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்கு தந்தது. தஞ்சை கூட்டம் மகிழ்ச்சியாக இருந்தது.

26-ந்தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை செயல் வீரர் கூட்டத்தில் பங்கேற்று பேசினேன். புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில், மத்தியில் ஆட்சி மாற்றம், அதற்கு உறுதியேற்கும் நாளாக நம் மாநாடு அமையட்டும் என்று பேசினேன்.

அதன்பின்னர் திருச்சி, அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றேன்.

கடலூர் மேற்கு மாவட்ட எல்லையான கழுதூர் எல்லையில் இளைஞரணியினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

நம் மீது இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ததும் வகையிலும் கட்சி பணியை, மக்கள் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தளராமல் உழைக்க வேண்டும் என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது.

நான் வரும்போது, பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதற்கு பதிலாக புத்தகங்கள், கட்சி வேட்டி, துண்டுகள் தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு இளைஞர் அணி வளர்ச்சிக்கு நிதியாகவும் தரலாம்.

இந்த பயணத்தில் நன்றி சொன்ன ஏழை, எளிய மக்கள், கோரிக்கை மனுக்களை கையில் சுமந்தப்படி காத்திருந்த பெண்கள் என கலவையான முகங்கள் என் முன் வந்து செல்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும். அவர்களுக்கு பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது.

மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வாக்கின்படி அடுத்தக்கட்ட பயணத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story