நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்


நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்
x

கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என அமைச்சர் பொன்முடி கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என அமைச்சர் பொன்முடி கூறினார்.

வீட்டுக்கு ஒரு விருட்சம்

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி மகளிர் கல்லூரியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் தொடக்க விழா மற்றும் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரோஸி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் எழிலன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி செழியன், அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பொன்முடி

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி

நான் கடந்த 1972-ம் ஆண்டு கும்பகோணம் அரசினர் தன்னாட்சி ஆண்கள் கலைக்கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தேன். அப்போது பெண்கள் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன். கும்பகோணம் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சி. கல்வியில் கும்பகோணம் பகுதி தொடர்ந்து முன்னேறி வருவதற்கு காரணம் இதுபோன்ற கல்லூரிகள் தான். தமிழக முதல்-அமைச்சர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

குரல் கொடுக்க வேண்டும்

நாட்டிலேயே 53 சதவீதம் கல்வியறிவு கொண்ட மாநிலம் தமிழகம். அதிலும் படித்த பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். உயர்கல்விக்கு நுழைவு தேர்வு தேவையில்லை என்பதே அரசின் கொள்கை.

மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர் கல்வியை பெற வேண்டும் என்பதே அரசின் கொள்கை. இதற்கு மாணவிகளாகிய நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுகாதாரமற்ற உணவு வழங்கினால் நடவடிக்கை

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் தனியாரின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரமற்ற உணவு வழங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் சில குற்றச்சாட்டுகள் வருகின்றன. இவை குறித்து அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து தனிப்பட்ட கவனத்திற்கு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் என்ஜீனியரிங் கல்லூரிகளில் பாடத்திட்டங்களை அதற்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்க வேண்டும் என அறிவித்து இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அழுத்தம்...

அரசு கலைக்கல்லூரி இல்லாத ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தோம். அது படிப்படியாக தொடங்கப்படும். இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் 31 கல்லூரிகள் தொடங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கபிஸ்தலம்

கபிஸ்தலம் பாலக்கரையில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதிகள் பிரபாகரன், சக்கரவர்த்தி மற்றும் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், தலைமை கழக பேச்சாளர் மதுரை சுந்தர் ராஜன், அன்பழகன் எம்.எல்.ஏ., கும்பகோணம் மாநகர துணை மேயர் தமிழழகன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசுகையில், தமிழக அரசு நிறைவேற்்றும் சட்டங்களை கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றார். கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் மற்றும் பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story