மானாமதுரை-சிவகங்கை சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் மர்ம கும்பல் வாகன ஓட்டிகள் அச்சம்


மானாமதுரை-சிவகங்கை சாலையில்  வழிப்பறியில் ஈடுபடும் மர்ம கும்பல் வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:46 PM GMT)

மானாமதுரை-சிவகங்கை சாலையில் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை-சிவகங்கை சாலையில் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

வழிப்பறி

மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கும், சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கும் தினந்தோறும் காலை, மாலை, இரவு நேரங்களில் இங்குள்ள பைபாஸ் சாலை வழியாக மோட்டார்சைக்கிள்கள், கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த பைபாஸ் சாலை வழியாக மோட்டார்சைக்கிளில் செல்பவர்களை மர்ம கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்து வழிமறிக்கின்றனர்.

பின்னர் அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விடுகின்றனர். இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

போலீசார் ரோந்து

கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட மானாமதுரையை சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வந்தபோது அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் மிரட்டி பணத்தை பறித்துள்ளது. இதுகுறித்து அவர் மானாமதுரை போலீசில் புகார் கொடுக்க சென்றபோது அது சிவகங்கை எல்லை என்று கூறி போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மானாமதுரையில் இருந்து சிவகங்கை ரோடு வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது கிடையாது. இதனால்தான் பைபாஸ் சாலையில் வழிப்பறி அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக மாலை 6 மணியிலிருந்து இரவு நேரங்களில் அவ்வப்போது ரோந்து சென்றால் மட்டுமே அப்பகுதியில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும். எனவே, இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story