குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்


குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்
x

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்

தஞ்சாவூர்

தஞ்சையில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கழிவுநீரும் கலந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பூங்காவுக்கான இடம்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே ராஜீவ்நகர் உள்ளது. இந்த நகரில் பூங்காவுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் இந்த இடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு முட்புதர்கள் வளர்ந்து காணப்பட்டன.

இந்த இடத்தை முறையாக பராமரித்து சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பூங்கா அமைப்பதற்கு பதிலாக குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

தேங்கி நிற்கும் தண்ணீர்

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. புற்கள் வளர்ந்து காணப்படுவதால் தண்ணீர் தேங்கி நிற்பது வெளியே தெரியாதஅளவுக்கு உள்ளது.

இந்த இடத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பின்புறம் இருக்கக்கூடிய பகுதிகளை சுற்றிலும் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த தண்ணீர் எங்கே இருந்து வந்தது என விசாரித்தபோது, புதுஆற்றில் இருந்து சமுத்திரம் ஏரிக்கு செல்லக்கூடிய பாசன வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்துள்ளது தெரியவந்தது.

கொசுக்கள் உற்பத்தி

பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, புதுஆற்றில் இருந்து சமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வசதியாக 2 பாசன வாய்க்கால்கள் உள்ளன. இவற்றில் தற்போது முட்புதர்கள் வளர்ந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்வதற்கு வழியின்றி வாய்க்கால்களில் தேங்கி நிற்பதுடன், குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது.

இந்த தண்ணீருடன் கழிவுநீரும் கலந்துவிடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த தண்ணீர் வடிந்து செல்வதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ள வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்க வேண்டும் என்றனர்.


Next Story