ஆண்டாங்கோவில் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்


ஆண்டாங்கோவில் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்
x

அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீராலும், கரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை நீராலும் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

கரூர்

தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்நிலையில் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணைக்கு நேற்றுமுன்தினம் காலை 6 மணி நிலவரப்படி 3,051 கனஅடி தண்ணீர் வந்தது. இதனையடுத்து அமராவதி அணையில் இருந்து 3,421 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதேபோல் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,671 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையிருந்து 2,925 கனஅடி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

தடுப்பணை

இந்நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்தமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வந்த மழைநீரும் சேர்ந்து கரூர் செட்டிப்பாளையம் கதவணையை தாண்டி, கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

இதனால் நேற்று காலை 14,570 கனஅடி தண்ணீர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்தது. இதனால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. இந்நிலையில் 90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 87.41 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 3,813.39 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.


Next Story