வீடுகள், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது


வீடுகள், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
x

நொய்யல் பகுதியில் கனமழை பெய்ததால் வீடுகள், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கனமழை

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், உப்புபாளையம், நத்தமேடு, குந்தாணிபாளையம், புன்னம் சத்திரம், புன்னம், சேமங்கி, முத்தனூர், சொட்டையூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, நஞ்சை புகழூர், கந்தம்பாளையம், பேச்சிப்பாறை, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்தநிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததன் காரணமாக மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகள் மற்றும் கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்ட பயிரிடப்பட்டிருந்த வயல் வெளியில்களுக்கு புகுந்தது. மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வியாபாரிகள் அவதி

கனமழையின் காரணமாக தார் சாலை ஓரங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், சாலை ஓரங்களில் சேரும், சகதியுமாக காணப்பட்டதால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

புகழூர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த ஒரு வாய்க்கால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்தநிலையில் காகித ஆலையில் இருந்து திறக்கப்பட்ட கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. மேலும் விவசாய நிலங்களுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காகித ஆலைக்கு கரும்பு சக்கை தூள்களை ஏற்றி சென்ற 30-க்கும் மேற்பட்ட லாரிகளை மறித்து போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காகித ஆலை நிர்வாக அதிகாரிகள், புகழூர் தாசில்தார் முருகன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றித்தர பரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story