வீடுகளே இல்லாத பகுதியில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள்


வீடுகளே இல்லாத பகுதியில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள்
x
தினத்தந்தி 16 May 2023 6:45 PM GMT (Updated: 16 May 2023 6:46 PM GMT)

மூங்கில்துறைப்பட்டில் வீடுகளே இல்லாத பகுதியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிருப்பதி அடைய செய்துள்ளது

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

ஜல்ஜீவன் திட்டம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் காமராஜர்நகர், அம்பேத்கர்நகர், மோகன்நகர், தேவிநகர், கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேவிநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் சில இணைப்புகள் வீடுகளே இல்லாத பாறைகள் நிறைந்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் குழாய்கள் பொருத்தப்படாத நிலையில் பயன்பாடு இல்லாத இடத்தில் உள்ள குடிநீர் இணைப்புளில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதில் தண்ணீர் வராமல் உஷ்.... உஷ்.... என்று வெறும் காற்று மட்டும் வரக்கூடிய நிலையை பார்க்க முடிகிறது.

இணைப்புக்காக காத்திருக்கும் மக்கள்

மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் ஏராளமான மலைவாழ்மக்கள் மற்றும் குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை இணைப்புகள் வழங்கப்படவில்லை. மாறாக வீடுகள் இல்லாத இடங்களில் குழாய்கள் பதித்து இணைப்புகள் வழங்கப்பட்டு, அவையும் காட்சிப்பொருளாக இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யவும், வீடுகளே இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


Next Story