குழாய் இல்லாமல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு


குழாய் இல்லாமல் வீடுகளுக்கு குடிநீர்  இணைப்பு
x

சதாகுப்பத்தில் குழாய் இல்லாமல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

சதாகுப்பத்தில் குழாய் இல்லாமல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குடிநீர் இணைப்பு

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சதாகுப்பம். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி, உண்ணாமலைபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு ஒத்துழைப்போடு வீட்டிற்கு வீடு சமமான முறையில் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு கடந்த சில மாதங்களாக குழாய் (பைப்லைன்) மூலம் தண்ணீர் வீட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது.

உண்ணாமலைபாளையத்தில் தண்ணீர் வரும் குழாய் இல்லாமல் மேற்பகுதியில் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு சிலாப் ஒன்றும் அதற்கு மேல் குழாய் பொருத்துவதற்கு சிமெண்டு கல்லும் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதன் கீழ் பகுதிகளில் தண்ணீர் வரும் குழாய்கள் (பைப்லைன்) இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

பெயரளவில்...

வீட்டிற்கு வீடு குழாய் அமைத்து அதன் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும் என்றும் அதற்காக தனியாக நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் பெயரளவில் இந்த பைப் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தற்போது வரை தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே பெயரளவில் குழாய் பொருத்தாமல் இருக்கும் இப்பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து வீட்டிற்கு வீடு தனியாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story