துரித நடவடிக்கையால் கிராமங்களுக்குள் நீர் புகாமல் தவிர்ப்பு


துரித நடவடிக்கையால் கிராமங்களுக்குள் நீர் புகாமல் தவிர்ப்பு
x

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்ததன் பயனாக கிராமங்களுக்குள் தண்ணீர் புகாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஆண்டு 2-ம் போக சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்ததன் பயனாக கிராமங்களுக்குள் தண்ணீர் புகாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஆண்டு 2-ம் போக சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நீர்மட்டம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக வைகை அணை முழுகொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது.

இந்த தண்ணீரை வீணாக்காமல் பெரிய கண்மாயில் சேமித்ததுடன் வரும் வழியில் பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இந்தநிலையில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் விரைவில் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் ராமநாதபுரம் அருகே வைகை தண்ணீர் கடலுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக வைகை அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ள அபாயம் விடப்பட்டது.

கரை உடைப்பு

இதன்காரணமாக 10 ஆயிரம் கனஅடி வரையில் ராமநாத புரம் நோக்கி வைகை தண்ணீர் வந்தது. இதனால் கடந்த ஆண்டுகளைபோல ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு முன்னதாக வைகை கரை உடைப்பு எடுத்து காவனூர், தொருவளுர் உள்ளிட்ட கிராமங்களை வைகை தண்ணீர் சூழ்ந்துவிடும் ஆபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரின் அளவை குறைக்க முடிவு செய்தனர். இதற்காக பெரிய கண்மாயில் இருந்து சக்கரக்கோட்டை கண்மாய்க்கு அதிகஅளவில் தண்ணீர் திறந்துவிட்டனர்.

குறைந்தது

இதனால் பெரிய கண்மாயின் கொள்ளளவு குறைந்து வந்த நிலையில் வைகை அணையில் இருந்து அதிகளவில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை பெருமளவில் பெரிய கண்மாய்க்குள் எடுத்தனர். இதனால் கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதன்மூலம் மேற்கண்ட கிராமங்களுக்குள் குறிப்பாக காவனூர் ஆற்று பாலத்தை தாண்டாமல் தண்ணீர் சாதாரணமாக ஓடைபோல சென்றது. பெரிய கண்மாயில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் சக்கரக்கோட்டை கண்மாயில் 60 சதவீதம் அளவில் தண்ணீர் சேர்ந்துள்ளது.

மகிழ்ச்சி

பெரிய கண்மாயில் குறைந்த தண்ணீருக்கு பதிலாக வைகை தண்ணீர் வந்து சேர்ந்ததால் 6 ¼ அடியை எட்டியது. இதுதவிர, களரி கண்மாய்க்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையும் பெய்ய உள்ளதால் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை பாசன பகுதிகளில் 2-ம் போக சாகுபடி செய்ய வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story