முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை


பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பு கூட்டம்

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழுவின்மாவட்ட கூட்டம் சிவகங்கையில் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. எல்.ஆதிமூலம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் உயர் மட்டகுழு உறுப்பினர்கள் முருகேசன், சுதா, தர்மலிங்கம் ஆப்ரஹாம், மதுரை மாவட்ட நிர்வாகி மதுரைவீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக ராமலிங்கம், செயலாளராக மாணிக்கவாசகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-

முல்லை பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு குழு அமைத்து அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு இதுவரை முன்வராதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நடவடிக்கை

பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ரூல் கர்வ் என்கிற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக 142 அடி தண்ணீரை தேக்கவிடாமல் கர்நாடக, கேரள அரசு செய்யும் சதிக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது. மேலும் வைகை அணை தூர்வாரப்படாததால் தண்ணீர் தேக்க முடியாமல் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. தமிழக நீர் பாசனத்துறை அமைச்சர் தூர்வார இயலாது என சட்டமன்றத்தில் கூறியிருப்பது முரணானது. நவீன முறையில் தூர் வார இயலும். அதனை செய்ய முன்வரவேண்டும்.

உயர்மட்ட குழு

கடந்த ஆட்சியில் நீர் பாசன துறை அமைச்சர் தலைமையில் தண்ணீர் குறித்து பேச உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அதனை தற்போதைய தி.மு.க.அரசு கைவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க அரசு முன்வர வேண்டும் அதற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு வழங்கவேண்டும். அதேபோல் தி.மு.க. அரசு தேர்தலின்போது விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செய்வதாக வாக்குறுதிகள் அளித்தது. அதில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை.

விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினால் திசை திருப்பவே செய்கிறது. தீர்வு காண்பதில்லை தி.மு.க. அரசு. இதனை பகிரங்கமாகவே தெரிவிக்கிறோம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து தற்போதைய அமைச்சர் முன்னுக்கு பின் முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.

இழப்பீடு

இது விவசாயிகளுக்கு தி.மு.க. அரசின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்துவிடும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடம்தர விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். அரசு கொண்டுவரும் சாலைவிரிவாக்கம் செய்து அமைத்தல் போன்ற வளர்ச்சித்திட்டங்களில் விவசாயிகளையும் பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story