உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தர்ணா
உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி தலைவராக நாகமணியும், துணைத்தலைவராக ஜெயந்திமாலாவும் உள்ளனர். இந்தநிலையில் ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, வார்டு உறுப்பினர்கள் 11 பேர் மாவட்ட கலெக்டர் மற்றும் கம்பம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 11 பேர் இன்று உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தாசில்தார் அர்ச்சுனனை சந்தித்து ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுக்கும் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுக்க சென்றனர். ஆனால் தாசில்தார் இதுதொடர்பாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.வுடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினார். இதனை ஏற்காத வார்டு உறுப்பினர்கள் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள், தாசில்தாரை சந்தித்து மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.