தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜி, மாணவி சிந்து ஆகியோரையும், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயத்தால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் சூர்யகுமாரையும் நேற்று மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
30 சதவீதம் சம்பள உயர்வு
மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமத்தில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஊதிய உயர்வுக்காக முதல்-அமைச்சரையும், என்னையும் சந்தித்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 28,982 பேருக்கு 30 சதவீதம் ஊதிய சலுகைகள் அளித்து ஆணைகள் அளித்திருக்கிறோம். அதற்கு ரூ.89 கோடியே 82 லட்சம் நிதி செலவினம் கூடுதலாக ஆகியிருக்கிறது. மீதம் இருக்கிற 5,971 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் எங்களுக்கும் 30 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
10 நாட்களில் வழங்கப்படும்
இக்கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, கடந்த ஏப்ரல் முதல் ரூ.32 கோடியே 78 லட்சம் செலவில் அந்த சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இன்னும் 10 நாட்கள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது.
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 4,848 நர்சுகள் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். இத்திட்டத்தின் கீழ் அவர்களுடைய பணி மிகச்சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் முதல்-அமைச்சரிடமும், என்னிடமும் சம்பள உயர்வு குறித்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஏப்ரல் மாதம் முதல் கணக்கீடு
கடந்த ஜனவரி மாதம் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டாலும் அவர்களுடைய பணி என்பது மகத்தான பணியாக இருந்து வருகிறது. அவர்களுடைய ஊதியம் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவும் கூட ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல், மருத்துவ சேவை வழங்கி வரும் 2,448 பேருக்கு மாதம் ரூ.11 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதியின் கீழ் கடந்த ஜனவரி முதல் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இவர்களும் எங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவர்களுக்கும் ரூ.3 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டு, ரூ.14 ஆயிரமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.
மகப்பேறு விடுப்பு
முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 13,267 பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தரும். தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் எங்களுக்கு மகப்பேறு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் எங்கேயும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது இல்லை. முதல்-அமைச்சரின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டு 6 மாத காலம் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
கரூரில் புனர்வாழ்வு மையம்
முதல்-அமைச்சர் நேற்று (அதாவது 21-ந்தேதி) 1 முதல் 6 வயதினருக்கான ஊட்டச்சத்து திட்டத்தினை நீலகிரியில் தொடங்கி வைத்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, கரூர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 3 புனர்வாழ்வு மையங்களை ரூ.44 லட்சம் செலவில் ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் பல் மற்றும் வாய் சுகாதார சேவைகளை வலுப்படுத்துகிற வகையில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் 29 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவ சிகிச்சைகள் பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் ரூ.87 லட்சம் செலவில் செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.