வ.உ.சி. துறைமுகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி; மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்


வ.உ.சி. துறைமுகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி; மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் பணி

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் மத்திய ஆயுஷ் துறை மூலமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனாவால் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் துறைமுக ஊழியர்கள் மற்றும் ஸ்பிக் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டு துறைமுக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினர்.

பின்னர் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி என்ற ஒரே நோக்கத்தோடு நாட்டு மக்களின் நலனுக்காக அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டிலுள்ள எதிர்கால சந்ததியை பாதுகாப்பதற்காக தேசிய அளவிலான தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அதிகளவில் மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் மருத்துவம், மூலிகை மற்றும் பழமரங்கள் என 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடல்

தூத்துக்குடி துறைமுக ஆணைய துணைத தலைவர் பிமல்ஜா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவமுருக ஆதித்தன், ராஜா சத்தியசீலன், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், வாரியார், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story