பள்ளிக்கூடத்தில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்


பள்ளிக்கூடத்தில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவ  மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
x

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளிக்கூடத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவ மாணவிகளுக்கு திடீரென வயிற்றுவலி வாந்தி மயக்கம் ஏற்பட்டது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

அரசு நடுநிலைப்பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புதுக்காலனி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 186 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் இப்பள்ளியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாத்திரைகளை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகள் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வலியால் அலறி துடித்தனர். மேலும் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவ்வாறு மொத்தம் 35 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்து உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைபெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story