விடுதி மாணவர்கள் 9 பேருக்கு வாந்தி-மயக்கம்


விடுதி மாணவர்கள் 9 பேருக்கு வாந்தி-மயக்கம்
x

குருசாமிபாளையத்தில் விடுதி மாணவர்கள் 9 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

ராசிபுரம்

விடுதி மாணவர்கள்

ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) உள்ளது. ஆதிதிராவிடர் நல விடுதி 25 மாணவர்கள் தங்கி இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று 24 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று காலையில் விடுதியில் சாப்பிட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். சில மாணவர்கள் மட்டும் விடுதியில் இருந்தனர். இதில் விடுதியில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவர்களில் சிலர் திடீர் வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதை பார்த்த ஆசிரியர்கள் 9 மாணவர்களை மீட்டு பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தவசீலன் தலைமையில் டாக்டர்கள் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் மற்றும் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்களை பரிசோதனை செய்தனர்.

தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி சுகந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சிகிச்சை பெறும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

அதேபோல் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் டாக்டர் சரோஜாவும் மாணவர்களை சந்தித்து சிகிச்சை அளித்தார். மேலும் பிஸ்கட், பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார். அவர் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போன்றவற்றை பரிசோதித்தார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேம்பு சேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தனபால், ராமசாமி ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர்.


Next Story