அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்


அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
x

அரியலூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அரியலூர்

வாந்தி-மயக்கம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக புஷ்பவல்லி உள்ளார். மேலும், சத்துணவு அமைப்பாளராக இளமதியும், சமையலராக சரஸ்வதியும், சமையல் உதவியாளராக சபிதாவும் பணியாற்றி வருகிறார்கள். நேற்று வழக்கம்போல் மாணவர்களுக்கு மதிய உணவாக புளி சாதம் மற்றும் முட்டை வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் சிறிது நேரத்திலேயே வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் அவினாஷ், லீரோஷன், மித்ரன் உள்பட 25 மாணவ-மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் அவர் தனது வாகனத்தில் 10 மாணவ-மாணவிகளை ஏற்றி சென்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், உணவு ஒவ்வாமை காரணமாக மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீடு திரும்பினர் என்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story