5 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி


5 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி
x

குடவாசல் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 5 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 5 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிலில் அன்னதானம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. அன்றைய தினம் அதே ஊரைச்சேர்ந்த ஒருவர் தனது உபயமாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். அதனை அந்த பகுதி மக்கள் வாங்கி சாப்பிட்டனர்.

வாந்தி-பேதி, காய்ச்சல்

மறுநாள் 26-ந் தேதி அந்த தெருவில் உள்ள சிலருக்கு வாந்தி-பேதி காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர்கள் கடையில் வாந்தி-பேதி தடுப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை இந்த பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், (வயது 40), சீனிவாசன்(70), பன்னீர்செல்வம்(43),சுஜாதா(32), பரமேஸ்வரி (37), ஜோதி(36),தேவதர்ஷினி(10), ரஸ்மிதா(11), யுவபாரதி(12), சுரேஷ்(40), ரஞ்சிதா(8), சுரேகா(4), சசிரேகா(30), துர்கா தேவி(36), தீபஸ்ரீ(12), கார்த்திகேயன்(18), தமிழ்ச்செல்வி(40), ஆகாஷ்(15) ஆகியோருக்கு வாந்தி-பேதி, காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இதனால் பயந்துபோன அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள சுரைக்காயூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் ெதரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜெகதீஷ், மருத்துவ குழுவினருடன் சென்று அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் அனைவரையும் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்கள்

இதுகுறித்து திருப்பாம்புரம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், கொடுத்த தகவலின் பேரில் குடவாசல் தாசில்தார் உஷாராணி, வருவாய் ஆய்வாளர் செல்வி ஆகியோர் திருப்பாம்புரத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி அறிவுறுத்தலின்படி திருப்பாம்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதுடன் அனைத்து வீடுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

இது குறித்து பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story