மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கியது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை


மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கியது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
x
தினத்தந்தி 20 July 2023 3:10 AM GMT (Updated: 20 July 2023 5:27 AM GMT)

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த வன்முறை சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது மனசாட்சி எங்கே? மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் குணத்தை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story