ஆக்கிரமிப்பை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


ஆக்கிரமிப்பை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x

பால் பண்ணைக்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முற்படுவதை தடுக்கக்கோரி மழவராயநல்லூர் கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, மழவராய நல்லூர் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் செந்தாமரை தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், எங்கள் கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் பால் பண்ணைக்கு கட்டிடம் இல்லாததால் நாங்கள் சாலையோரத்தில் மாடுகளை கட்டி பால் கறந்து சங்கம் மூலம் ஆவினுக்கு வழங்கி வருகிறோம். இந்த நிலையில் பால் பண்ணைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கலெக்டர் உத்தரவின் படி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் எழுமூர் கிழக்கு கிராம புல எண்ணில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்டிடம் கட்ட பாதுகாப்பு வேண்டும்

அந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்க முற்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளவையாரால் அளவிடப்பட்டு அத்து கற்கள் நடப்பட்டது. அந்த இடத்தில் கட்டிடம் கட்ட நாங்கள் முற்பட்ட போது தனிநபர் தனது சகோதரருடன் சேர்ந்து ஆக்கிரமிக்க முற்பட்டார். இது தொடர்பாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனாலும் அதனை மீறி அவர்கள் கூலி படையினரை அழைத்து வந்து கட்டிடம் கட்டும் பணியை தொடங்க விடாமல் தடுத்து வருகின்றனர். எனவே பால் பண்ணை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் தனிநபர் ஆக்கிரமிக்க முற்படுவதை தடுத்து, கட்டிடம் கட்டுவதற்கு பாதுகாப்பு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு...

வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மார்சல் ராயன் தலைமையில் அப்பேரவையினர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் எங்கள் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடத்தினோம். அதன்படி இந்த ஆண்டு வருகிற மே மாதம் 21-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தவுள்ளோம். எனவே அதற்கு தமிழக அரசின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் பெற்று தரவும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குடிநீர் வசதி கோரி

குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி தெற்கு தெரு கிராம மக்களும், பழைய வேட்டக்குடி கருப்பையா கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மக்களும் சேர்ந்து வந்து கலெக்டரிடம் தனித்தனியாக மனுக்களை கொடுத்தனர். அதில், புதுவேட்டக்குடி தெற்கு தெருவில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், சாலை, தெரு விளக்குகள் போன்ற வசதிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் கழிவுநீர் வாய்க்கால் போடப்பட்டதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். பழைய வேட்டக்குடி கருப்பையா கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மக்கள் கொடுத்த மனுவில், புதுவேட்டக்குடி கிராம ஊராட்சி மன்றத்தின் செயல்பாட்டால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்து பயன்பாடில்லாமல் இருக்கிறது. இதனால் எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. எனவே அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தெருக்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். 100 நாள் வேலையில் முறையாக வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மனு

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சி தினசரி காய்கறி மாா்கெட் வியாபாரிகள் கொடுத்த மனுவில், கொரோனா ஊரடங்கில் மார்க்கெட் மூடப்பட்ட போது, நாங்கள் வெளியில் சென்று காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தோம். ஊரடங்கு முடிந்து மீண்டும் நாங்கள் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வந்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கின் போது மார்க்கெட் அருகே தெருவோரங்களிலும், பாலக்கரை சாலையோர பகுதிகளிலும் போடப்பட்ட காய்கறி கடைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு பெரும்பாலான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருவதில்லை. இதனால் மார்க்கெட் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி கடை வாடகையை கூட நகராட்சிக்கு செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே தெருவோர, சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 293 மனுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story