கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா
x

கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, செட்டிகுளம் அருகே உள்ள மாவிலங்கை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை இயக்க கோரியும், கூடுதல் அரசு பஸ் வசதி கேட்டும் மனு கொடுக்க திரண்டு வந்தனர்.

அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் உயர்நிலை, மேல்நிலை படிப்பதற்கு மாணவ-மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிகுளத்துக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் தற்போது காலை 8.30 மணிக்கு வரும் அரசு டவுன் பஸ் ஒன்று மட்டும் இயங்கி வருகிறது. இதனால் அந்த பஸ்சில் பாதுகாப்பு இல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர்.

கூடுதல் அரசு பஸ்கள்

மாலையில் வீடு திரும்புவதற்கு பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்தும், சிலர் வாகனங்களில் லிப்டு கேட்டும் வீட்டிற்கு செல்கின்றனர். காலை 6, 9, 11.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் வர வேண்டிய பஸ்கள் வருவதில்லை. தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொகுதி அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நிலைமை இருக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்திற்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்குவதற்கும், மேலும் கூடுதல் அரசு பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்கள் தர்ணாவை கைவிட்டு, அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை தொடர்பாக மனுவினை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

முறைகேடுகள்

வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்கு உட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், பீல்வாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. சிறுமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நமையூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காலனி வீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

பெரம்பலூர் ஒன்றியம், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூரை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கல்பாடி, கவுல்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கல்லூரி மாணவ-மாணவிகள் மனு

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தற்போது பெரம்பலூர்-துறையூர் சாலை மாநில நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் கல்லூரி முன்பு உள்ள சாலையில் இரு புறமும் வேகத்தடை அமைக்கவும், பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 262 மனுக்களை பெற்றார்.


Next Story