சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்


சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்
x

மணல்மேடு அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குண்டும், குழியுமான சாலை

மணல்மேட்டை அடுத்த சேத்தூர் முதல் ஆனதாண்டவபுரம் வரை உள்ள சாலை சேதமடைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை ஆனதாண்டவபுரம், பன்னீர்தலைமேடு, கீழ மருதாந்தநல்லூர், மேல மருதாந்தநல்லூர், பொன்வாசநல்லூர் சேத்தூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சாலைமறியல்

இந்தநிலையில் நேற்று சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் வைத்தீஸ்வரன்கோவில் - மணல்மேடு சாலையில் மண்ணிப்பள்ளம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து மணல்மேடு போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வருகிற ஜனவரி மாதத்தில் சாலை அமைத்து தரப்படும் எனவும், பஸ் இயக்கம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story