கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை


கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை
x

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கீரப்பாளைம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி,

கீரப்பாளைம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவராமன் தலைமையில் என்னாநகரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் என்னாநகரம் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த பட்டியலில் அரசு ஊழியர்கள், பெரு விவசாயிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் சாதாரண ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டுள்ளன.

இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவர்கள் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இது குறித்த தகவலின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகீம் மற்றும் புவனகிரி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது ஏற்கனவே தயார் செய்த பட்டியலில் உள்ள தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்படும். மேலும் தகுதிவாய்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் செல்லையா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.நெடுஞ்சேரலாதன், கே.முருகன், கே.சோமசுந்தரம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story