குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்ற கிராம மக்கள்


குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 March 2023 12:15 AM IST (Updated: 4 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே காவல் தெய்வமாக ஊர் பூசாரியை நிற்க வைத்து விட்டு குடும்பத்தினருடன் கிராமமக்கள் திருப்பதிக்கு சென்றனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே காவல் தெய்வமாக ஊர் பூசாரியை நிற்க வைத்து விட்டு குடும்பத்தினருடன் கிராமமக்கள் திருப்பதிக்கு சென்றனர்.

ஆன்மிக பயணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊரை காலி செய்து விட்டு குடும்பம் குடும்பமாக திருப்பதிக்கு சென்று வருவது வழக்கம். இது அறிவிக்கப்படாத ஊர் கட்டுப்பாடாக இன்று வரை தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதையொட்டி இந்தாண்டு கிராம மக்கள் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்த ஆன்மிக பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்தனர். அதில் பொதுமக்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காணிக்கை போட்டு வைத்தனர்.

காவல் தெய்வமான ஊர் பூசாரி

இந்தநிலையில் அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் வீடுகளை பூட்டி விட்டு நேற்று 15 பஸ்களில் ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டனர். முன்னதாக, அவர்கள் ஊர் தலைவர் மாரியப்பன் தலைமையில், கிராமங்களை சுற்றிலும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் பஸ்களில் திருப்பதிக்கு சென்றனர்.

ஊரின் வழக்கம்படி ஊர் பூசாரி காவல் தெய்வமாக எல்லையில் கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார். திருப்பதி கோவிலுக்கு சென்ற கிராம மக்கள் வந்தவுடன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர் பூசாரிக்கு ஊர் மரியாதை செய்த பின்னர் அவரவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வார்கள். ஊரை காலி செய்து விட்டு பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்றதால் கிராமமே வெறிச்சோடியது.


Next Story