விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் 1,15,749 ஆண் வாக்காளர்களும், 1,18,393 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 31 பேரும் ஆக மொத்தம் 2,34,173 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்வதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பூத் சிலிப்கள் வாகனம் மூலம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பூத் சிலிப்புகளை தாலுகா அலுவலக ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து வாக்காளர் பட்டியலின்படி சரிபார்த்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் முடிந்ததும் அந்த பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு அவை ஓரிரு நாளில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story