விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாணவி ஸ்ரீமதியின் தாயார் மனு நிராகரிப்பு - அலுவலகத்தின் முன்பு தர்ணா


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாணவி ஸ்ரீமதியின் தாயார் மனு நிராகரிப்பு - அலுவலகத்தின் முன்பு தர்ணா
x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி, 21-ந்தேதி வரை நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி, 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், ஸ்ரீமதியின் தாயார் உள்ளிட்ட பலர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரிசீலனையில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் உட்பட 29 மனுக்களை ஏற்றுக் கொள்வதாகவும், ஸ்ரீமதியின் தாயார் உள்ளிட்ட 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.

சுயேச்சை வேட்பாளர்களான ஸ்ரீமதியின் தாய் செல்வி, விநாயகம், இசக்கிமுத்து, கோவிந்தராஜ், முத்துக்குமார் சாமிநாதன் ஆகியோர் தேர்தல் அலுவலரின் செயல்பாடுகளை எதிர்த்து அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். "நாங்கள் முறையான வகையில் மனுக்கள் அளித்திருக்கிறோம். எங்கள் மனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளன" என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சட்டப்படி இதற்கு தீர்வுகாணுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story