துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்: கவர்னரின் தலையீட்டை கண்டிக்கிறோம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்: கவர்னரின் தலையீட்டை கண்டிக்கிறோம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
x

துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியின் தலையீட்டை கண்டிக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில், மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கிறது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு கவர்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இக்குழுவில் உள்ள உறுப்பினர்களை நியமிக்கும் போது கவர்னர் தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்கவில்லை. மேலும் இதுவரை இல்லாத நடைமுறையாக பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதி எச்.சி.எஸ்.ரத்தூரை ஒரு உறுப்பினராக நியமனம் செய்தார்.

தமிழ்நாடு அரசு இந்த போக்கை வன்மையாக கண்டித்ததோடு, தமிழ்நாடு மாநில உயர்கல்வி செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் இருந்து பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் ரத்தூரை நீக்கி அரசு இதழில் அறிவிப்பு வெளியிட்டார். தமிழ்நாடு கவர்னர் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெறக் கோரி உயர்கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கவர்னரின் இத்தகைய போக்கு மாநில அரசின் உரிமைகளில் தேவையற்ற தலையீட்டை உள்நோக்கத்தோடு செய்கிறார் என்பதை உறுதி செய்கிறது. கவர்னரின் இத்தகைய செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. இப்பிரச்சனையில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story