அணைக்கரை பாலத்தை கடந்து செல்ல காத்திருக்கும் வாகனங்கள்


அணைக்கரை பாலத்தை கடந்து செல்ல காத்திருக்கும் வாகனங்கள்
x

அணைக்கரை பாலத்தை கடந்து செல்ல காத்திருக்கும் வாகனங்கள்

தஞ்சாவூர்

திருப்பனந்தாள

கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட அணைக்கரை பாலத்தை கடந்து செல்ல வாகனங்கள் காத்து இருப்பதால் புதிய பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அணைக்கரை பாலம்

கும்பகோணம்-சென்னை சாலையில் அணைக்கரையில் கொள்ளிடம் ஆறு இரு பிரிவாக பிரிந்து செல்கிறது. இங்கு 1½ கிலோமீட்டர் தொலைவுக்கு கீழணை 1840-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது மதகுகளுடன் கூடிய பாலமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுடன் இணைக்கும் வகையிலும் இந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பொது போக்குவரத்து நடைபெற்று வந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் பாதுகாப்பை கருதி பஸ்கள், கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது.

போலீசாரால் நிறுத்தப்படும் வாகனங்கள்

இதனால் பஸ்கள் எல்லாம் மாற்றுவழியில் இயக்கப்பட்டன. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அணைக்கரை பாலத்தின் வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்பவர்கள் பஸ்கள், கார்கள் மூலம் அணைக்கரை பாலத்தின் வழியாகவே சென்று வருகின்றனர். மேலும் டிராக்டர்கள், லாரிகள், இருசக்கர வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. இந்த பாலம் மிகவும் குறுகலாகவே இருக்கிறது. ஒரு பஸ் மட்டும் செல்லும் அளவுக்கு தான் அகலம் உள்ளது. இதனால் சென்னை, அரியலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் பாலத்தின் ஒரு புறத்தில் போலீசாரால் நிறுத்தப்படுகின்றன.

பயணிகள் சிரமம்

எதிர், எதிர் புறத்தில் இருந்து ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்தால் பாலத்தில் செல்ல முடியாமல் அப்படியே நிற்க வேண்டிய நிலை தான் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஏதாவது ஒரு வாகனம் பின்நோக்கி வந்தால் தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். இதனால் தான் பாலத்தை கடந்து செல்ல வேண்டும் என்றால் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பஸ்களில் பயணம் செய்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அணைக்கரை பாலத்திற்கு பதிலாக புதிதாக பாலம் ஒன்றை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தஞ்சை-அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் மத்தியஅரசின் நாற்கர சாலை திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பு

ஆற்றின் குறுக்கே தூண்கள் அமைக்கப்பட்டு, கான்கிரீட்டால் ஆன பெரிய அளவிலான இணைப்பு பாலங்களும் தயார் செய்யப்பட்டு, அந்த பாலங்கள் இணைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இணைப்பு பாலம் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு ஆற்றில் தண்ணீரும் திறந்துவிடப்பட்டால் தற்போது பணி மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்தி புதிய பாலத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.


Related Tags :
Next Story