சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம்


சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம்
x

சென்னை-நெல்லை இடையே இந்த மாத இறுதியில் வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், 2 மணி நேரம் மிச்சமாகும்.

சென்னை,

இந்தியாவில் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் உள்ளிட்ட அம்சங்களால் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 23 ரெயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில், சென்னை-கோவை, சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், சென்னை-நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவை முன்கூட்டியே இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2 மணி நேரம் மிச்சம்

சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு பெட்டி வி.ஐ.பி.க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கைகளும், மற்றொரு புறம் 2 இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 552 பேர் பயணிக்க முடியும். இதில், வி.ஐ.பி.பெட்டியில் பயணம் செய்ய ரூ.2 ஆயிரத்து 800 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது. மற்ற பெட்டிகளுக்கு கட்டணமாக ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை கட்டணமாக வசூலிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். தற்போது 8 மணி நேரத்திற்குள் சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 முதல் 2½ மணி நேரம் மிச்சமாகும்.


Next Story