வல்லம் பேரூராட்சி முன்மாதிரியாக விளங்குகிறது
வல்லம் பேரூராட்சி முன்மாதிரியாக விளங்குகிறது
வல்லம்
தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் வல்லம் பேரூராட்சி முன்மாதிரியாக விளங்குகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.
குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன
தஞ்சை அருகே வல்லத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகின்றன.
இந்த குப்பைகள் அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் இயற்கை உரமாக தயார் செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் வளம் மீட்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன.
மாநிலத்திற்கே முன்மாதிரி
வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாநிலத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்திலேயே பெரிய விருட்சவனம் திருமலைசமுத்திரத்திலும், இசைவனம் திருவையாறிலும் உள்ளது. வல்லத்தில் உள்ள வளம் மீட்பு பூங்காவை சிறப்பாக பராமரித்து வரும் பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுகள் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து 380 மரக்கன்றுகளை நட்டும், மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.4 லட்சம் நிதி உதவியும், பேரூராட்சி பணியாளர்களுக்கு நல வாரிய அட்டையினையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். இதில் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
200 மரக்கன்றுகள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் ரவிக்குமார் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருடன் இணைந்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தன் ஓய்வு பெறும் நாளில், அவரது நினைவாக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பயன் தரும் 200 மரக்கன்றுக்களை நட்டார்.