அம்மைநோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி


அம்மைநோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அம்மை நோய்

சீர்காழி தாலுகா பகுதிகளுக்குட்பட்ட சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், மாதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோமாரி மற்றும் அம்மை நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 19-ந்தேதி படத்துடன் வெளியானது.

கால்நடை மருத்துவ முகாம்

இதன் எதிரொலியாக நேற்று சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலாடுதுறை கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குனர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முன்னிலை வகித்தார். முகாமை கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குனர் ஈஸ்வரன் கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசியை செலுத்தி தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

60 ஆயிரம் தடுப்பூசி

முதல் கட்டமாக 100 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 60 ஆயிரம் கால்நடைகளுக்குபெரியம்மை நோய் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்களுடைய கால்நடைகள் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து உரிய சிகிச்சைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சேஷகிரி, கார்த்திக், கால்நடை ஆய்வாளர் முருகன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்தமிழ்செல்வி, ராமசந்திரன், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பாராட்டு

உடன் நடவடிக்கை எடுத்து மருத்துவ முகாம் அமைத்த கால்நடை துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story