30,217 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,024 இடங்களில் 30,217 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று 2,024 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், தர்மபுரி நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,024 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 30,217 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.