சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி படவேட்டம்மன் கோவில் வீதி வழியாக உற்சவர் ஊர்வலம்


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி படவேட்டம்மன் கோவில் வீதி வழியாக உற்சவர் ஊர்வலம்
x

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி படவேட்டம்மன் கோவில் வீதி வழியாக உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

ஐகோர்ட்டு உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் ஒருபகுதியாக உற்சவர் தேரில் மாடவீதி உலா வருவது வழக்கம். உற்சவர் உலா வந்த பின், பாரிவேட்டை நடத்தப்படும். பல ஆண்டுகளாக இது நடந்து வந்தாலும், எஸ்.சி., பிரிவினர் அதிகம் வசிக்கும் படவேட்டம்மன் கோவில் வீதியில் தேர் உற்சவம் செல்வது இல்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு அறநிலையத்துறையிடம் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், உற்சவர் தேர், படவேட்டம்மன் கோவில் வீதியிலும் வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர், "உற்சவர் தேர் படவேட்டம்மன் கோவில் வீதியிலும் செல்லும். இதுகுறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "உற்சவர் தேர் செல்வதால் ஏதேனும் பிரச்சினை இருந்தால், தகுந்த பாதுகாப்பு கேட்டு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனுதாரர் மனு கொடுக்கலாம். அதன்படி தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வீதி உலா வந்தது

இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவுபடி திருப்போரூர் படவேட்டம்மன் கோவில் தெரு வழியாக மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்துக்குமாரசாமி திருத்தேர் உற்சவம் வீதி உலா நடைபெற்றது. இதனை அந்த பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்று மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து பூக்களால் மலர் தூவி உற்சவர் முருகனை வரவேற்றனர்.

பின்னர் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை செய்து தீப ஆராதனை நடைபெற்றது. நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு தங்கள் தெரு வழியாக வீதி வீதிஉலா வந்த முருகப்பெருமானை அந்த பகுதி மக்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.


Next Story