கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகை


கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகை
x

வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

தமிழ்நாட்டில் உள்ள 4,550 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்வேறு விதமான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கக்கூறி வற்புறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் சங்கங்கள் மென்மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். கடந்த நிதியாண்டில் லாரி, வேன், சரக்கு வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை பல கூட்டுறவு கடன் சங்கங்கள் வாங்கி பயன்படுத்தியதால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் சங்கங்களும், சங்க பணியாளர்களும் அவதிக்குள்ளாகி வருவதுடன் ஊதியம்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மேற்கண்ட திட்டத்தின் கீழ் லாரி, வேன், சரக்கு வாகனம், டிராக்டர் வாங்க வற்புறுத்துவதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள 152 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களும் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை, தொடர்பாக மண்டல இணைப்பதிவாளரிடம் மனு கொடுத்தனர். இதில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் அனந்தசயனன், பொருளாளர் பழனி, துணைத்தலைவர்கள் சுகுமார், ஏழுமலை, துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனை இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், ஏற்கனவே வாங்கியுள்ள உபகரணங்கள், வாகனங்களை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வருகிற 3-ந் தேதி ஒப்படைத்துவிட்டு சங்க பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த தொடர் விடுப்பில் செல்வது என முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story