இந்திய அளவில் ஊழலை ஒடுக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை சோதனை-மத்திய மந்திரி வி.கே.சிங் பேச்சு


இந்திய அளவில் ஊழலை ஒடுக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை சோதனை-மத்திய மந்திரி வி.கே.சிங் பேச்சு
x

இந்திய அளவில் ஊழலை ஒடுக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

புதுக்கோட்டை

மத்திய இணை மந்திரி ஆய்வு

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாள சான்றுகள் கிடைத்துள்ளது. இந்த இடத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் 14 மற்றும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேற்று வந்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் அகழாய்வு பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள், பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கி கூறினர். அவரும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

அரியபொருட்கள்...

இதுகுறித்து மத்திய இணை மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- தொன்மையான, பழமை வாய்ந்த இந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் 14 மற்றும் 15-ம் நூற்றாண்டை சோ்ந்த பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெறும் போது ஆழமாக தோண்டுகையில் மேலும் பல அரியபொருட்கள் கண்டெடுக்கப்படலாம். மதுரை கீழடி, பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள், பொக்கிஷங்கள் பயன்கள் பற்றி உலகம் முழுவதும் அறிய செய்யப்படும். அகழாய்வு பணிக்கு மத்திய, மாநில அரசு நிதி என்ற பாகுபாடு தேவையில்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் ஒரு அங்கம் தான் மாநில அரசு. இவ்வாறு அவர் கூறினார்.

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை இங்கேயே வைத்து பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மத்திய இணை மந்திரி வி.கே.சிங் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமலாக்கத்துறை சோதனை

இதையடுத்து, மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பார்த்திபன், மாவட்ட துணைத்தலைவர் வில்லன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேசும்போது கூறியதாவது:-

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒரு அங்கமாக இருந்தனர். தி.மு.க. குடும்ப கட்சி. இதுதான் ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜனதா தேச மக்களுக்கான கட்சியாக உள்ளது. உலகிலேயே சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. தொழில்நுட்பத்திலும் வளர்ந்துள்ளது. இந்திய அளவில் ஊழலை ஒடுக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

தைல மரங்கள் அகற்றப்படும்

மத்திய அரசு வரியில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநில அரசிடம் கேளுங்கள் எங்கள் வரிப்பணம் என்னாச்சு என்று பேசியவர் 'புரிஞ்சுதா' என்று கூட்டத்தினரை நோக்கி தமிழில் கேட்டதும் கூட்டத்தினர் குரல் உயர்த்தினர். நமது நாட்டின் எல்லைகளை பாதுகாப்பாக மாற்றி உள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனா போரில் உடனடி பதிலடி கொடுத்து 100 சீன வீரர்களை வீழ்த்தினோம். நீங்கள் உறுதியாக நம்புங்கள் பாதுகாப்பான, சக்திமிக்க அரசாக மோடி அரசு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தைல மரங்களை அகற்ற வேண்டும். மண்ணையும், நீர் ஆதாரத்தையும் பாதுகாக்க தைலமரங்கள் அழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story