தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

புயல் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே நிலைகொண்டு உளளது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. தொடர்ந்து வருகிற 14-ந் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதனால் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

பலத்த காற்று வீசும்

அதே நேரத்தில் புயல் காரணமாக கடலில் பலத்த காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காை முதல் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்திலும் மீனவர்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

கூண்டு ஏற்றம்

மேலும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு, கடலில் புயல் உருவாகி இருப்பதை அறிவிக்கும் வகையில், துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.


Next Story