திருச்சி-விருதுநகர் ரெயில் கழிவறை வசதி பெட்டியுடன் இயக்கம்


திருச்சி-விருதுநகர் ரெயில் கழிவறை வசதி பெட்டியுடன் இயக்கம்
x

புதுக்கோட்டை வழியாக திருச்சி-விருதுநகர் ரெயில் கழிவறை வசதி பெட்டியுடன் இயக்கப்படுகிறது. இதனை தினசரி ரெயிலாக மாற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

கழிவறை வசதி

புதுக்கோட்டை வழியாக திருச்சி-விருதுநகர் இடையே 217 கி.மீ. தூரம் ஒரே ரெயில் எண்ணுடன் பயணிகள் ரெயில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனை நிர்வாக காரணங்களுக்காக விருதுநகர்-காரைக்குடி-திருச்சி, திருச்சி-காரைக்குடி- விருதுநகர் என பிரிக்கப்பட்டு இரு எண்களை கொண்ட ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் முதலில் கழிவறை வசதி இல்லாத டெமு ரெயிலாக இயக்கப்பட்டது. இந்த ரெயிலை கழிவறை வசதி பெட்டியுடன் கூடிய ரெயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி-விருதுநகர் ரெயில் இரு மார்க்கத்திலும் கழிவறை வசதியுடன் கூடிய ஐ.சி.எப். பெட்டியாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்த ரெயில் தற்போது கழிவறை வசதியுடன் கூடிய ரெயிலாக இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினசரி ரெயிலாக...

திருச்சி-காரைக்குடி- விருதுநகர் ரெயிலானது வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும், மறுமார்க்கத்தில் விருதுநகர்-காரைக்குடி-திருச்சி ரெயிலானது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர இயக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்திருந்தனர். தற்போது இந்த ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றி சேவை ரத்தான நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தினருக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு விட்டதால் இந்த பயணிகள் ரெயிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story