நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்


நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:45 PM GMT)

பர்கூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் காரகுப்பம் மற்றும் ஒரப்பம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.77 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், நூலகம், புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அலுவலக வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கட்டுமான பணிகள்

பின்னர், காரகுப்பம் ஊராட்சி ஒன்றியம் அம்மேரி கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் பாலேப்பள்ளி ஊராட்சி ஆரோக்கியமாதா நகரில் தனிநபர் விவசாய நிலத்தில் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு மண் வரப்பு அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து ஒரப்பம் ஊராட்சி பையனப்பள்ளி கிராமத்தில் ஒன்றிய நிதியில் இருந்து மதகு சீரமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

டாக்டர்களுக்கு உத்தரவு

தொடர்ந்து பர்கூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, சித்தா பிரிவுகளை பார்வையிட்டார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சீராக உள்ளதா என்று கேட்டு அறிந்தார். அப்போது பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை அகற்றி மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்டராம கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர்கள் செல்வம், அன்புமணி, உதவி பொறியாளர்கள் நாகராஜ், ஆசைத்தம்பி, பணி மேற்பார்வையாளர்கள் சண்முகவடிவு, திருவேங்கடம், முதன்மை மருத்துவ அலுவலர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story