சிறுவர்களுக்கு சாலை விதிகளை விளக்கும் போக்குவரத்து பூங்கா


சிறுவர்களுக்கு சாலை விதிகளை விளக்கும் போக்குவரத்து பூங்கா
x

சிறுவர்களுக்கு சாலை விதிகளை விளக்கும் போக்குவரத்து பூங்கா

தஞ்சாவூர்

தஞ்சையில் ரூ.50 லட்சம் செலவில் சிறுவர்களுக்கு சாலை விதிகளை விளக்கும் வகையில் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1050 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்நிறுத்தத்தில் உள்ள வணிக வளாகம், அய்யன்குளம், சாமந்தான்குளம் உள்ளிட்டவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன.

மேலும் சிவகங்கை பூங்கா பராமரிப்பு, அகழிகள் சீரமைப்பு, குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், சாலை பணிகள், விளையாட்டு அரங்கம் அமைத்தல், பெத்தண்ணன் கலையரங்கம் சீரமைத்தல், சோலார் மின் வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து பூங்கா

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் அருகே போலீஸ் துறைக்கு சொந்தமான இடத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

35 ஆயிரம் சதுரஅடிஅடி பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக தற்போது மைதானம் முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளே நடைபாதை, போக்குவரத்து சிக்னல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகர வாழ் மக்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு சாலை போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு முறைகளை மிக எளிய முறையில் பயிற்றுவிக்கும் நோக்குடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

அறிவிப்பு பலகைகள்

இதில் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது எந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு வழிமுறைகள், சாலைகளை கடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் ஆங்காங்கே சாலை விதிமுறைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படுகின்றன. போக்குவரத்து சிக்னல், சாலை குறியீடுகளும், எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்படுகின்றன.

மலை பகுதிகளில் சாலைகளில் எவ்வாறு செல்ல வேண்டும், நீர் நிலை பகுதிகளில் உள்ள சாலைகளில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது. வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கக்கூடாது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.

சைக்கிள் பயணம் செல்லலாம்

இங்கு 10 சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. சைக்கிளில் ஏறி சிறுவர்கள் எவ்வாறு சாலைகளில் விதிமுறைகளை கடைபிடித்தபடி பயணம் செய்யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இதர பகுதிகளில் புல்தரைகளும் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளை அழைத்து வருபவர்கள் அமருவதற்காக தனியாக இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் அடுத்தமாதம் (ஜூலை) 15-ந்தேதிக்கள் முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக குழந்தைகள் எதையும் ஆழ்ந்த கவனத்துடனும், துரிதமாகவும் கற்றுக்கொள்ளக்கூடியவர்கள். எனவே அவர்களுக்கு சிறு வயதிலேயே சாலைபோக்குவரத்து விதிமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும், எவ்வாறு சாலையில் பயணிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story