சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு


சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
x

சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூர்

அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் தற்காலிக மீன்மார்க்கெட்டில் சகதியில் நின்று மக்கள் மீன்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

தற்காலிக மீன்மார்க்கெட்

தஞ்சை ராவுத்தாபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2001-ம் ஆண்டு புதிய மீன்மார்க்கெட் கட்டப்பட்டது. ஆனால் முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் வரமாட்டார்கள் எனவும், வியாபாரம் இருக்காது எனவும் கூறி மீன் வியாபாரிகள் இடம்மாற மறுத்ததால் 7 ஆண்டுகளாக மீன்மார்க்கெட் பூட்டியே கிடந்தது. எல்லா வசதிகளும் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் கடந்த 2008-ம் ஆண்டு வியாபாரிகள் புதிய மீன்மார்க்கெட்டிற்கு இடம் மாறினர்.

இந்த மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை விற்பனை கடைகளும், 15 மொத்த வியாபாரிகளும், 100-க்கும் மேற்பட்ட மீன்வெட்டும் தொழிலாளர்களும் இருந்தனர். இந்த மீன்மார்க்கெட் முறையாக பராமரிக்கப்படாததால் கட்டிடங்கள் பழுதடைந்தன. இதனால் இந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அதன்பிறகு கொண்டிராஜபாளையம் அகழிக்கரையில் தற்காலிகமாக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மீன்மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

போக்குவரத்து பாதிப்பு

வியாபாரிகளும், மக்களும் சகதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஈரத்துடன் கூடிய சகதியில் நின்று கொண்டு தான் மீன்களை வாங்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. அதுமட்டுமின்றி மீன்மார்க்கெட்டில் இருந்து வடிந்து செல்லக்கூடிய கழிவுநீர் கொண்டிராஜபாளையம் ரவுண்டானா அருகே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மீன்மார்க்கெட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வரக்கூடியவர்கள் சாலையோரத்தில் அப்படியே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால் கும்பகோணம், திருவையாறு, அரியலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தஞ்சை மாநகருக்கு வரக்கூடிய பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கொண்டிராஜபாளையம் ரவுண்டானாவை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதே பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை சுத்தம் செய்து அங்கே இருசக்கர வாகனங்களை நிறுத்த வழிவகை செய்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

அடிப்படை வசதிகள்

மேலும் மீன்மார்க்கெட்டில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே தற்காலிக கழிவறை அமைப்பதுடன், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்ட இடத்தில் இன்னும் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் அகற்றப்படாமல் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து தற்காலிக மீன்மார்க்கெட்டை அங்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கலாம். புதிய மீன்மார்க்கெட் கட்டப்படும் வரை இந்த மாற்று ஏற்பாடு செய்தால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பது தடுக்கப்படுவதுடன் சகதியில் நின்று மீன்கள் வாங்கக்கூடிய நிலையும் மாறும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.


Next Story