விளையாட்டு போட்டிக்கு பெயர் பதிவு செய்ய நாளை மறுநாள் கடைசி


விளையாட்டு போட்டிக்கு பெயர் பதிவு செய்ய நாளை மறுநாள் கடைசி
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:47 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் வீராங்கனைகள் பெயர் பதிவு செய்ய நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கடைசி என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

42-வகை போட்டிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகை, மண்டல அளவில் 8 வகை என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் கிரிக்கெட் போட்டி புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிரிக்கெட் போட்டி மாணவர்களுக்கு தனி குழுவாகவும், பொதுமக்களுக்கு தனி குழுவாகவும் நடைபெற உள்ளது.

பெயர் பதிவு

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களையும் நாளை மறு நாளைக்குள்(திங்கட்கிழமை) பதிவு செய்யவேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-வது பரிசு ரூ.2 ஆயிரம், 3-வது பரிசு ரூபாய் ஆயிரம், குழு விளையாட்டில் கபடி, கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.36 ஆயிரம், 2-வது பரிசு ரூ.24 ஆயிரம், 3-வது பரிசு ரூ.12 ஆயிரம், கால்பந்து, ஆக்கி ஆகிய போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.54 ஆயிரம், 2-வது பரிசுரூ.36 ஆயிரம், 3-வது பரிசு ரூ.18 ஆயிரம் வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் இப்போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்களில்(99435 09394,86757 73551,74017 03485) தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story