சதம் அடித்து வதம் செய்யும் தக்காளி


சதம் அடித்து வதம் செய்யும் தக்காளி
x
தினத்தந்தி 3 July 2023 7:30 PM GMT (Updated: 3 July 2023 7:31 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் தக்காளி விலை உயர்ந்து சதம் அடித்து மக்களை வதம் செய்கிறது.

திண்டுக்கல்

சைவம், அசைவம் என்ற எந்த வகையான உணவு தயாரிப்பதாக இருந்தாலும் அதில் தக்காளி நிச்சயம் இடம் பிடிக்கும். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அன்றாடம் அனைவரும் உணவில் பயன்படுத்துவது தக்காளியை தான். 'சமையல் ராணி' என்று அழைக்கப்படும் தக்காளிக்கு என்று திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தனி மார்க்கெட்டு செயல்படுவது கூடுதல் சிறப்பு.

சதம் அடித்த தக்காளி

சீசன் காலத்தில் தக்காளி வரத்து அதிகரித்து விலைவீழ்ச்சி அடைவது வாடிக்கை. அந்த சமயத்தில் சாலையோரத்திலும், குளக்கரையிலும் குவியல், குவியலாக தக்காளிகளை விவசாயிகள் வேதனையுடன் கொட்டிச்சென்ற சம்பவங்கள் கடந்த கால வரலாறு. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி அல்ல. ஜெட் வேகத்தில் தக்காளி விலை ஏறி கொண்டே இருக்கிறது. சதத்தை தாண்டி எல்லோரையும் வதம் செய்து கொண்டிருக்கிறது தக்காளி.

இதனால் தக்காளிக்கு மாற்று ஏதாவது இருக்கிறதா? என்று சிந்திக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. திண்டுக்கல்லில் கடைகளில் கடந்த வாரம் கிலோ ரூ.70-க்கு விற்ற தக்காளி நேற்றைய தினம் ரூ.110 வரை விற்கப்பட்டது.

வியாபாரிகள் ஏக்கம்

விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் காய்கறி கடைகளுக்கு செல்லும் மக்கள் தக்காளி வாங்குவதை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் தக்காளி இல்லாத சமையல் தலை தூக்கி விட்டது. இதனால் திண்டுக்கல்லில் உழவர் சந்தை, காந்தி மார்க்கெட், சாலையோர கடைகள், தினசரி சந்தைகளில் தக்காளி விற்பனை குறைந்து விட்டது.

காய்கறி கடைகளில் தக்காளி இருந்தும் மக்கள் வாங்க தயங்குவதால், வியாபாாிகள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி வாங்குவதற்கு மக்கள் வரமாட்டார்களா? என்று வியாபாரிகள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தக்காளி வரத்து குறைவு, மழை பொழிவு குறைவு ஆகியவையே தக்காளி வரத்து குறைவுக்கு காரணம் என்கின்றனர். அதனால் தக்காளி விலை உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் உற்பத்தி உயர்ந்தால் மட்டுமே விலை குறையும் என்பதால் மக்களின் தவிப்பு அதிகரித்து உள்ளது. இதுகுறித்து விவசாயி, வியாபாரி, இல்லத்தரசிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

விளைச்சல் இல்லை

முருகேசன் (விவசாயி, ஒண்டிபொம்மன்நாயக்கனூர்) :- ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கடுமையான வெயில், காற்று காரணமாக தக்காளி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்து விட்டது. விவசாயிகளிடம் இருந்து 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.1,500-க்கு மேல் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மழை பெய்து தக்காளி விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே விலை குறையும்.

ரவிக்குமார் (வியாபாரி, அய்யலூர்) :- அய்யலூர் தக்காளி மார்க்கெட்டில் சீசன் நாட்களில் தினமும் சராசரியாக 100 டன் தக்காளி விற்பனை நடைபெறுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தக்காளி அதிகமாக கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக அய்யலூர் மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில தக்காளி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நேற்று ஒரு டன்னுக்கும் குறைவாகவே தக்காளி வந்தது. இதனால் நேற்று முன்தினம் ரூ.1,300-க்கு விற்ற 14 கிலோ தக்காளி பெட்டியின் விலை நேற்று ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை விற்றது.

ரேஷன்கடைகளில் விற்பனை?

ராமலட்சுமி (இல்லத்தரசி, கொடைக்கானல்) :- கொடைக்கானலில் கடந்த வாரம் நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை ஆனது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 2 கிலோ தக்காளி வாங்க சென்ற நான், ஒரு கிலோ தக்காளி மட்டுமே வாங்கினேன். அது தீர்ந்த நிலையில் இன்று (நேற்று) உள்ளூரில் உள்ள கடைகளுக்கு சென்று விசாரித்தபோது, ஒரு கிலோ தக்காளி ரூ.120 என்றனர். எனவே ரேஷன் கடைகளில் மானிய விலையில் தக்காளி, காய்கறிகளை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தக்காளிக்கு பதில் புளி

சுகன்யா (குடும்ப தலைவி, ஆயக்குடி) :- சமையலில் சைவம், அசைவம், சாம்பார், புளிக்குழம்பு என அனைத்துக்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை உயர்ந்து வருவதால், அதை பயன்படுத்துவதை குறைத்து வருகிறேன். பழனி உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. இதர காய்கறி கடைகளில் கிலோ ரூ.130-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் வீட்டில் தக்காளி சட்னி வைப்பதில்லை. அதேபோல் சாம்பார், புளிக்குழம்பு என்றாலும் அதில் தக்காளியை குறைத்து புளியை சேர்த்து வருகிறேன். தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தக்காளி விலையை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திண்டுக்கல் உழவர் சந்தையில் நேற்று வெளியிடப்பட்ட காய்கறிகளின் விலை பட்டியலில் சதமடித்த மற்றும் ரூ.100-ஐ நெருங்கிய காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-

கத்தரிக்காய்- ரூ.70, மொச்சை- ரூ.80, அவரை- ரூ.100, பச்சைமிளகாய்- ரூ.140, சின்ன வெங்காயம்- ரூ.80, இஞ்சி- ரூ.220, கேரட்- ரூ.76, பட்டர் பீன்ஸ்- ரூ.130, சோயா பீன்ஸ்- ரூ.120.


Related Tags :
Next Story