தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியதுஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை


தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியதுஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை
x

ஈரோட்டில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டி ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

ஈரோடு

ஈரோட்டில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டி ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

புதிய உச்சம்

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து உள்ளது. தமிழகத்திலும் கடந்த 2 மாதங்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. தினமும் ரூ.10, ரூ.20 என்று விலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.

இந்தநிலையில் தக்காளியின் வரத்து மேலும் குறைந்ததால், விலை உயர்ந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது. இதனால் தக்காளி வாங்க வந்த இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போன்ற காய்கறியின் விலை சற்று குறைந்து உள்ளது. எனவே நீண்ட நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வந்த தக்காளியின் விலையும் குறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வந்தனர். ஆனால் மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியிருப்பது நடுத்தர குடும்பத்தினரை சிரமம் அடைய வைத்தது.

ஆயிரம் பெட்டிகள்

கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்ற இல்லத்தரசிகள் எண்ணி, எண்ணி தக்காளியை பொருக்கி எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும், அழுகிய தக்காளி வந்துவிடக்கூடாது என்று பொறுமையாக தேடி எடுத்து பெண்கள் தக்காளியை வாங்கினர்.

இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறுகையில், "தாளவாடி, ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பல்லடம் ஆகிய ஊர்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டுக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 7 ஆயிரம் பெட்டிகள் வரத்து காணப்படும். ஆனால் விளைச்சல் குறைந்ததன் காரணமாக சுமார் 2 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே விற்பனைக்காக வருகின்றன. நேற்று பெங்களூரு, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து மட்டும் சுமார் ஆயிரம் பெட்டிகள் தக்காளி மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் தக்காளியின் விலை உயர்ந்தது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது", என்றார்.


Related Tags :
Next Story