டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந் தேதி தொடக்கம்


டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந் தேதி தொடக்கம்
x

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 12-ந் தேதி தொடங்குகிறது.

திருநெல்வேலி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 12-ந் தேதி தொடங்குகிறது.

டி.என்.பி.எல். போட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் வருகிற ஜூன் 12-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லையில் நடக்கிறது.

நெல்லையில் 9 ஆட்டங்கள்

கோவையில் வருகிற 12-ந் தேதி நடக்கும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி உள்பட கோவையில் 6 ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. நெல்லையில் 9 போட்டிகள் நடத்தப்படுகிறது. நெல்லையில் ஜூலை 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், பால்சி திருச்சி அணியும் மோதுகின்றன.

டி.ஆர்.எஸ். முறை

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கழக உதவி செயலாளர் ஆர்.என்.பாபா நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;-

டி.என்.பி.எல். போட்டியின் ப்ளேஆப் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 32 போட்டிகள் 25 நாட்களில் நடத்தப்படுகிறது. குவாலிபையர்- 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று சேலத்திலும், குவாலிபையர்- 2 மற்றும் இறுதிப்போட்டி நெல்லையிலும் நடத்தப்படுகிறது. இந்த சீசனில் முதல்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது. போட்டிக்கான சாதாரண டிக்கெட் ரூ.200-க்கும், உணவு வசதியுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 90 சதவீதம் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. கவுண்ட்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

ரிசர்வ் டே

மழையினால் நாக்-அவுட் மற்றும் இறுதிப்போட்டிகள் தடைபடாமல் இருக்க ரிசர்வ் டே முறை வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போட்ஸ் 1 ஹச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை கிரிக்கெட் கழக தலைவர் சரவணமுத்து, செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story